போடியில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு 7.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பலத்த காற்று வீசியதால் போடியில் 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.