திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்துகட்டிய மழை
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மழை வெளுத்துகட்டியது.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மழை வெளுத்துகட்டியது.
வெளுத்துகட்டிய மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் காலை நேரத்தில் வழக்கமான வெயிலின் தாக்கம் இல்லை. வானம் மேகமூட்டமாக காட்சி அளித்ததால் அவ்வப்போது லேசான இளம் வெயில் அடித்தது.
இதற்கிடையே மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழை சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து 2.10 மணிக்கு மீண்டும் மழை பெய்தது. இந்த முறை சுமார் 30 நிமிடங்கள் வரை மழை வெளுத்துகட்டியது. இதன் பின்னர் மாலை 4.45 மணிக்கு தொடங்கி 30 நிமிடங்கள் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
குளம்போல் தேங்கிய தண்ணீர்
பள்ளிகள் முடியும் நேரத்தில் மழை பெய்ததால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஒருசில பெற்றோர் குடையை பிடித்து கொண்டும், தலையில் துணியை போட்டுகொண்டும் மாணவர்களை அழைத்து சென்றனர்.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் பள்ளி முன்பு குளம் போல் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் தவித்தனர். திண்டுக்கல் மாநகராட்சி சாலையில் உள்ள கடைகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதேபோல் தொடர் மழையால் நாகல்நகர், நேருஜிநகர், ரவுண்டுரோடு, தாடிக்கொம்பு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.
ஒருசில இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து தெருக்களில் ஓடியதால் மக்கள் சிரமம் அடைந்தனர். அதேநேரம் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், குஜிலியம்பாறை, பழனி அருகே கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்துகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.