சதுரகிரியில் கடும் கூட்ட நெரிசல்: 3 பெண்கள் திடீர் மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி

சதுரகிரியில் நேற்று மலையேற தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.;

Update: 2024-08-06 03:27 GMT

கோப்புப்படம்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்தினம் வரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக மதியம் 12 மணிக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் மூடப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதை, மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மாலை 6 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மலையேறி சென்றதால் மலைப்பாதையிலும், சுந்தரமகாலிங்கம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறையவே இல்லை.

கூட்ட நெரிசல் காரணமாக மலைப்பாதையில் இரட்டை லிங்கம் பகுதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு இறங்கிய பக்தர்கள் மாலை 6 மணி முதல் கீழே இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மலைப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம் மற்றும் போலீசார் பணியில் இல்லை எனவும், ஒரே இடத்தில் உணவு மற்றும் குடிநீரின்றி பல மணி நேரம் காத்திருந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் கடைசி நாளான நேற்று பக்தர்கள் மலை ஏற முழுவதும் தடை விதிக்கப்பட்டது. கோவில் மற்றும் மலைப்பாதையில் தங்கியிருந்த பக்தர்கள் மட்டும் அடிவாரத்துக்கு இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய குருகீதா, குமரகீதா, லட்சுமி ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கினர். உடனடியாக அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்