சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை

சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-20 08:49 GMT

தலைமை ஆசிரியர்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்தவர் பழனியப்பன் (வயது 52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மங்கையர்க்கரசி, இவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார். வழக்கம்போல கீழார் கொள்ளை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பழனியப்பன் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் கரை ஒதுங்கியது

இந்த நிலையில் கல்பாக்கம் அணுவாற்றல் துறை கடற்கரையில் நிர்வாண கோலத்தில், உடலில் காயங்களுடன் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கல்பாக்கம் போலீசார் பழனியப்பனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேரில் வந்து இது மாயமான பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன்தான் என்று உறுதி செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், எப்படி கல்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்தார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிறகு அவரது மனைவி மங்கையர்கரசி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கல்பாக்கம் போலீசில் அளித்துள்ள புகாரில், எங்களது குடும்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் 2 மகள்களுடன் நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம்.

கொலையா?

தனது கணவர் தலைமை ஆசிரியராக வேலை செய்த இடத்தில் முன்விரோதம் காரணமாக யாராவது, அவரை கொலை செய்து கடலில் உடலை வீசினார்களா? என சந்தேகமாக உள்ளது எனவும் இது குறித்து புலன் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து கல்பாக்கம் போலீசார் பழனியப்பன் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்