தலை, கைகளை துண்டித்து உடல் தீ வைத்து எரிப்பு: ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலி கைது - பரபரப்பு தகவல்கள்
தலை, கைகளை துண்டித்து ஆட்டோ டிரைவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கன்னப்பாளையம் செல்லும் சாலையோரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர், மாங்காடு சாதிக் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதின்(வயது 32) என்பது தெரியவந்தது.
சிராஜூதினை கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட அவரது தலை மற்றும் கைகளையும் தேடி வருகின்றனர்.
மேலும் விசாரணையில் கொலையான சிராஜூதின், தனது கள்ளக்காதலி ஜூனத்(45) என்பவருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா? எனவும் போலீசார் விசாரித்தனர்.
சிராஜூதினின் கள்ளக்காதலி ஜூனத்திடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். கடைசியாக சிராஜூதின் தனது ஆட்டோவில் ஜூனத் வீட்டுக்கு சென்றதும், மறுநாள் காலையில் அங்கிருந்து ஆட்டோ புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது. அவர் பிணமாக கிடந்த இடத்திலும் அவரது ஆட்டோ வந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் அவரது கள்ளக்காதலி ஜூனத்தின் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தியதில், சிராஜூதினை தனது மற்றொரு கள்ளக்காதலன் மகேஷ்(42) என்பவருடன் சேர்ந்து கொலை செய்து, தலை, கைகளை துண்டித்து, உடலை தீ வைத்து எரித்ததாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
சிராஜூதினுக்கும், ஜூனத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையில் நகைக்கு ஆசைப்பட்டு விருகம்பாக்கத்தில் துணை நடிகையை கொலை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
ஜூனத்திடம் இருந்து சிராஜூதின் அதிக அளவில் பணத்தை வாங்கி உள்ளார். தற்போது ஜூனத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தன்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி சிராஜூதினிடம் கேட்டார். ஆனால் சிராஜூதின் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது ஜூனத் வீட்டுக்கு மட்டும் வந்து சென்றார்.
இதற்கிடையில் ஜூனத்துக்கு தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வரும் மகேசுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தன்னிடம் வாங்கிய பணத்தை சிராஜூதின் தரமறுப்பதாக மகேசிடம் கூறி ஜூனத் வருத்தப்பட்டார். மீண்டும் பணத்தை கேட்டும் தராவிட்டால் சிராஜூதினை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று மகேஷ், சிராஜூதின் இருவரும் மது அருந்திவிட்டு ஜூனத் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜூனத்தின் மகள்களிடம் சிராஜூதின் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மகேஷ், சிராஜூதினை சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த சிராஜூதின் அதே இடத்தில் இறந்துவிட்டார்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்கவும், உடலை அடையாளம் காணாமல் இருக்கவும் சிராஜூதின் தலை மற்றும் கைகளை துண்டித்து விட்டு, உடலை கொண்டு சென்று வெவ்வேறு இடங்களில் போட்டு தீ வைத்து எரித்து விடலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி மகேஷ் வாங்கி வைத்திருந்த கத்தியால் சிராஜூதின் தலை மற்றும் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டி, அதனை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று திருமழிசை பகுதியில் தீ வைத்து எரித்து விட்டதாகவும், சிராஜூதின் உடலை அவரது ஆட்டோவிலேயே எடுத்துச்சென்று கன்னப்பாளையம் பகுதியில் குப்பை மேட்டில் வீசி தீ வைத்து எரித்து விட்டு, ஆட்டோவின் நம்பர்களை அழித்து விட்டு ஆவடியில் ஒரு பகுதியில் விட்டு சென்றதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து ஜூனத் மற்றும் மகேஷ் இருவரையும் திருவேற்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
துண்டிக்கப்பட்ட சிராஜூதின் தலை மற்றும் கைகளை எரித்த இடத்தை மகேஷ் மாறி, மாறி கூறி வருவதால் இன்னும் அவரது தலை, கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் கைகள் கிடைக்கவில்லை என்றாலும் டி.என்.ஏ. பரிசோதனையின் அடிப்படையில் சிராஜூதின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.