மருந்து என நினைத்து விஷத்தை குடித்தவர் சாவு
கீழக்கரையில் மருந்து என நினைத்து விஷத்தை குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.
கீழக்கரை,
கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன்(வயது 40). இவருடைய மனைவி காளீஸ்வரி. இவர் நகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். காளீஸ்வரி கீழக்கரை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கிணறுகளுக்கு ஊற்றும் பூச்சி மருந்தை கொடுத்து விட்டு மீதம் இருந்ததை ஒரு ஜூஸ் பாட்டிலில் வீட்டில் வைத்து உள்ளார்.
இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கணேசன், மருந்து என நினைத்து ஜூஸ் பாட்டிலில் இருந்ததை குடித்து உள்ளார். இதனால் வாந்தி எடுத்த அவரை காளீஸ்வரியும், உறவினர்களும் மீட்டு சிகிச்சைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.