காகித ஆலையில் பணிக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம்.. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார்

கரூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், வேலைக்கு சென்றவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-30 13:28 GMT

கரூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த அருண் சுதன். புகழூரில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில், கிரேன் ஆப்ரேட்டராக 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இரவு பணிக்கு சென்றபோது, நெஞ்சுவலி என ஆலையில் உள்ள முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், வாய்வு தொல்லையாக இருக்கும் எனக் கூறி, சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. எனினும் சுதனுக்கு தொடர்ந்து நெஞ்சுவலி இருந்த காரணத்தால், மயங்கி விழுந்துள்ளார். அவசரமாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனை செய்ய மருத்தவர்கள் வந்தபோது காகித ஆலை தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இழப்பீட்டு தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை ,மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரேத பரிசோதனை செய்யவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் தாசில்தார் முருகன், அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் ஆகியோர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து புகளூர் காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், சீனியர் மேலாளர் சிவகுமார் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயிரிழந்த அருண் சுதன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு படிப்பின் அடிப்படையில் வரும் ஒரு மாதத்திற்குள் நிரந்தர வேலை தருவதாக உத்தரவாதம் அளித்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து காகித ஆலை தொழிலாளர்கள், அவரது உறவினர்கள், குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். மேலும் வரும் 30 நாட்களுக்குள் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்காவிட்டால் காகித ஆலை கேட் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

அதை தொடர்ந்து வேலாயதம்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அருண் சுதன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த சுதனுக்கு மனைவி மற்றும் 6 வயது குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்