பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-29 21:02 GMT

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வினோத்குமார் (வயது 32). செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு செம்பியம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நிலத்தகராறு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார்.

அவரிடம் போலீஸ் ஏட்டு வினோத்குமார், செல்போன் எண்ணை வாங்கி வைத்து கொண்டார். அதன்பிறகு வினோத்குமார், அடிக்கடி அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்ததாகவும், அவரது செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வாய்த்தகராறு

இதனை பார்த்த அந்த பெண்ணின் கணவர், போலீஸ் ஏட்டு வினோத்குமாரை வீட்டுக்கு வரும்படி கூறி அவரது செல்போனுக்கு பதிலுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு வினோத்குமார், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் பெண்ணின் கணவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பெண்ணின் கணவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

பணியிடை நீக்கம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் செம்பியம் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் சென்றது. அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

அதில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கிய ஏட்டு வினோத்குமார், அவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் அதிரடியாக உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்