காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
கோவை
கோவையில் காலை நேரத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடைபயிற்சி
கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
பணி காரணமாக அவரது கணவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு வரவில்லை. இதனால் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
நகை பறிக்க முயற்சி
அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் மர்ம நபர்கள் வந்தனர். அதில் ஒரு நபர் காரின் முன் பக்க கதவை திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்த போதிலும் தனது இருகைகளாலும் நகையை பற்றிப்பிடித்துக்கொண்டார். மேலும் அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். இதற்கிடையில் கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
வீடியோ வைரல்
இதையடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் வந்த காரில் நம்பர் பிளேட் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. நகை பறிப்பு சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருடர்கள் நடந்து வந்து நகை பறிப்பதையும், இருசக்கர வாகனங்களில் வந்து நகை பறிப்பதையும் அறிந்து இருக்கிறோம். ஆனால் தற்போது காரில் வந்து நகை பறிக்கும் அதிர்ச்சி சம்பவமும் அரங்கி வருகிறது. எனவே நடைபயிற்சி செல்பவர்களின் நலன் கருதி அதி காலை நேரத்திலும் முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.