சிறைகளில் நூலகம் இருந்தால், கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
சிறைகளில் நூலகம் இருந்தால், கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 135 மத்திய சிறைகள், 3 பெண்களுக்கான சிறப்பு சிறைகள், 103 துணை சிறைகள், 10 பெண்களுக்கான துணை சிறைகளும், இவை தவிர 7 சிறப்பு துணை சிறைகள் உள்ளன.
பெரும்பாலான சிறைகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கிடையாது.
கைதிகளுக்காக சிறைகளில் நூலக வசதி ஏற்படுத்தவும், அதை அனைத்து கைதிகளும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான சிறைகளில் நூலக வசதி செய்யப்படவில்லை.
எனவே தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் நூலகங்கள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பல நேரங்களில் கைதிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக நூலகம் உதவியாக இருக்கும். சிறைகளில் நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றனர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை உயர் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.