கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது 'மண்டேலா' படம் விருது பெற்றது பற்றி யோகிபாபு பேட்டி

மண்டேலா படத்தில் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. விருது கிடைக்கும் என்று நான் சொன்னது நடந்து விட்டது என்று நடிகர் யோகிபாபு கூறினார்.

Update: 2022-07-23 00:06 GMT

சென்னை,

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான 'மண்டேலா' படத்துக்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் யோகிபாபு கூறியதாவது:-

'மண்டேலா' படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்துக்காக மொத்த படக்குழுவினரும் கஷ்டப்பட்டோம். அதற்கு பலன் கிடைத்து இருக்கிறது.

நான் சொன்னது நடந்தது

முதலில் இந்த படம் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தது. ஓ.டி.டியில் வெளியானதும் உலகம் முழுவதும் நிறைய பேரை போய் சேர்ந்தது. இன்னும் கிராமத்தில் வசிக்கும் பலரை இந்த படம் சென்று அடையவில்லை என்ற மன வருத்தம் உள்ளது. தேசிய விருது பெற்றதன் மூலம் படம் பலருக்கு தெரிய வந்து இருக்கும். பார்க்காதவர்களும் படத்தை பார்ப்பார்கள்.

சாதாரண நகைச்சுவை நடிகரான என்னை நடிக்க வைத்து படத்துக்கு தேசிய விருதை பெற வைத்துள்ள இயக்குனர் அஸ்வின் திறமையான இயக்குனராவார். தேசிய விருது திரையுலகினருக்கு முக்கியமான விருது. உங்களுக்கு விருது கிடைக்கும் என்று இயக்குனரிடம் முதலிலேயே நான் சொன்னேன். அது நடந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நூறு சதவீதம் உழைப்பு

'சூரரைப்போற்று' படத்தில் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியதாவது:-

தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. சூரரைப்போற்று படத்துக்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுத்தோம்.

இது வாழ்க்கை கதை என்பதால் என்ன மாதிரி இசை தேவை என்பதை ஆராய்ச்சி செய்து கொடுத்தேன். இந்த படத்தின் இந்தி ரீமேக்கிலும் நான்தான் இசையமைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டைரக்டர் சுதா கொங்கரா

'சூரரைப்போற்று' படத்தை இயக்கிய டைரக்டர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியோடு கூறியதாவது:-

சூரரைப்போற்று படத்துக்கு 5 விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சூர்யா கடின உழைப்பை கொடுத்தார். இந்த படத்தை எடுக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன.

எங்கு விமான நிலையம் இருக்கிறது என்று தேடி தேடிப்போய் படப்பிடிப்பை நடத்தினோம். 56 லொக்கேஷன்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள் இருந்தன. பெரிய கதையை சுருக்கி திரைக்கதையாக்கவே 3 வருடங்கள் ஆனது. இப்போது படத்துக்கு 5 விருதுகள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்