ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கைதி கையை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கைதி கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-29 18:45 GMT

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கைதி கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயில் கைதி

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் ஆதிபரமன் என்ற பரமேசுவரன் (வயது 29). இவர் மீது மதுரையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில், வழிப்பறி, ஆயுதங்கள் வைத்து இருத்தல் போன்ற வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பரமேசுவரன் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

மதுரை ஜெயிலில் கைதிகள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதில் ஈடுபட்ட கைதிகளை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஜெயில்களுக்கு இடமாற்றம் செய்தனர். அப்போது ஆதிபரமன் என்ற பரமேசுவரன் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட ஜெயிலுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி மாற்றப்பட்டார்.

கையை அறுத்துக்கொண்டார்

இவர் மதுரையில் இருந்தபோது அடிக்கடி கைகளில் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரமேசுவரன் காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வந்து இறங்கியபோது, பரமேசுவரன் மறைத்து வைத்து இருந்த சிறிய தகரம் போன்ற பொருளால் தனது கைகளில் சரமாரியாக அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தம் கொட்டியது. அப்போது, பரமேசுவரன் ஜெயிலுக்குள் கொடுமை நடப்பதாக சத்தம் போட்டதால் பரபரப்பு நிலவியது.

தீவிர சிகிச்சை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பரமேசுவரனை உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்