குட்கா பதுக்கி விற்ற கடைக்கு 'சீல்'

கூடலூரில் குட்கா பதுக்கி விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

Update: 2022-10-20 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் குட்கா பதுக்கி விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

போலீசார் சோதனை

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை முதல் கூடலூர் நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கோழிக்கோடு சாலையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அங்கு பதுக்கி வைத்திருந்த 11 பண்டல்களில் 165 குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

கைது

பின்னர் கூடலூர் முத்தமிழ் நகரை சேர்ந்த வேலுச்சாமி (வயது 44) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தவிர தொடர் எச்சரிக்கையை மீறியதால் அந்த கடைக்கு சீல் வைக்க உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கூடலூர் ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வந்த மகேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடையில் சோதனை செய்தனர். அப்போது குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் உள்ளிட்ட போலீசார் கடையை சீல் வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்