பள்ளி வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.;
சென்னை,
தமிழக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 6,754 பள்ளி வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது.
பள்ளி மாணவ-மாணவிகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலைவிதிகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா? என்பதையும் விசாரித்து அந்தந்த மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கோ அல்லது வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் பொதுமக்களும் சாலைகளில் அதிவேகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு விரிவான வழிமுறைகளை கொடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.