ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம்
வேலூரில் ஜெயில் காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயிலில் பணிபுரியும் காவலர்கள், ஊழியர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஜெயில் மருத்துவர் பிரகாஷ் அய்யப்பன், உதவி ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஜெயில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். குறிப்பாக காவலர் குடியிருப்பில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், மின்வினியோகம், தூய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது.
மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காவலர் குடியிருப்பு வளாகத்தில் மாநகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.