கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2022-09-12 18:18 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 264 மனுக்கள் பெறப்பட்டன.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 36 மனுக்கள் பெறப்பட்டன. புகழூர் காகித ஆலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சார்பாக புகழூர் காகித ஆலை மண்ணின் மைந்தர்கள் நல அமைப்பு சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-எங்களுக்கு பரம்பரையாக வாழ்வளித்த எங்களது பூர்வீக நிலத்தை தமிழ்நாடு காகித ஆலைக்காக 1982-84-ம் ஆண்டு அரசு ஆணைப்படி வருவாய்த்துறை மூலம் குறைந்த விலையில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.அதற்கு நாங்கள் முன்னின்று ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாக ஆலை எந்தவித பிரச்சினையும் இன்றி தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

குடும்ப வாரிசுகளுக்கு...

1982-ம் ஆண்டு அரசு ஆணைப்படி குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்ற அடிப்படையில் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த கிரேடில் பணியமர்த்தப்பட்டோம். 1994-ம் ஆண்டுக்கு பிறகு ஆலை விரிவாக்கத்தின் போது ஒரு சிலருக்கு 1984-1994-ம் ஆண்டு வரை கடைபிடித்த நடைமுறையை மாற்றி தொழிலாளர் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்- 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த அனைவருக்கும் ஒரே கிரேடு (அன்ஸ்கில்டு) வழங்கப்பட்டது. பிறகு அன்ஸ்கில்டு லோயர் என்ற கிரேடில் 3 ஆண்டு பயிற்சி காலம் என பணி ஆணை வழங்கப்பட்டது. எங்கள் வாழ்வாதாரமான பூர்வீக நிலத்தை இழந்து பணியில் சேர்ந்து குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றுவிட்டதாலும், கடைநிலை ஊழியராக சேர்ந்து முழுப்பயனையும் அடையாததால் எங்களின் வாரிசுகளுக்கு ஆலையின் வேலைவாய்ப்பில் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை அளிக்கும் 2022-ம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் பெற்றுத்தர வேண்டுகிறோம். தற்போது காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களில் கல்வித்தகுதியின் அடிப்படையில் எங்களது வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களது நிலம் இருந்தால் பரம்பரையாக எங்கள் குடும்ப வாரிசுகளுக்கு பயன்படும். எங்களது வாரிசுதாரர்கள் தொடர்ந்து பணி செய்ய நிலையான அரசு ஆணையை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்குவாரிகள்

உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு செய்து முறையாக உரிமை முடிந்த குவாரிகளை ரத்து செய்யவும், உரிமை உள்ள குவாரிகளில் கனிமவளம் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரிகளில் முறையான பதிவேடுகள், முதலுதவி பெட்டி மற்றும் கழிப்பறை வசதி கூட இல்லாத நிலையில் தான் செயல்பட்டு வருகின்றன. இதில் தாங்கள் தலையிட்டு அனைத்து தனியார் கல்குவாரி மற்றும் கிரசர்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்