ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் - தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-07-01 00:55 GMT

கோப்புப்படம்

சென்னை,

பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் கல்லறைகளை 4 வாரத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில், பழைய சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி கட்டிடம் அருகே கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் எலிஹூ யேல் என்பவரின் மகன் டேவிட் யேல் மற்றும் அவருடைய நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.

இந்நிலையில் சட்டக்கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த பாரம்பரிய கட்டிட வளாகத்தை ஐகோர்ட்டு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. இங்கு பொதுமக்கள், வக்கீல்கள், போலீஸ்காரர்களின் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாற்ற முடியாது

ஆனால், ஆங்கிலேயர்களின் கல்லறைகள் பாதுக்காக்கப்பட்ட நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், இங்கு கட்டுமானம் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், இந்த கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மனோகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

அப்போது மத்திய தொல்லியல் துறை தரப்பில், 1684-ம் ஆண்டு முதல் 1688-ம் ஆண்டு இடையிலான காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த இரு கல்லறைகளும் 1921-ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் சட்டப்படி இவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் இரு கல்லறைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

அடிமை மனப்பான்மை

இதையடுத்து நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவி்ல் கூறியிருப்பதாவது:-

தொல்லியல் துறை சட்டத்தின்படி ஒரு இடத்தை புராதன சின்னமாகவோ அல்லது பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாகவோ அறிவிக்க 100 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த இடம் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று தொன்மையாகவும், கலைநயமிக்கதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த இரு கல்லறைகளும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றவை அல்ல என்பதால் அவற்றை 4 வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்ற மத்திய தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் கல்லறைகள் அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுதந்திரத்துக்கு பிறகும் தொடர வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தொடர்வது அடிமை மனப்பான்மை இன்னும் இந்திய அதிகாரிகளின் மனதிலிருந்து அகலவில்லை என்பதையே காட்டுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்