அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-02 17:25 GMT

கிராம சபை கூட்டம்

தமிழகத்தில் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் திருமானூர் ஒன்றியம், வாரணவாசியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் பயன் பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விழிப்புணர்வு வேண்டும்

அப்போது கலெக்டர் பேசும்போது, அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை ஊராட்சிகளில் சிறந்த முறையில் செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக முதல்-அமைச்சரின் உரை காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழ்செல்வன், வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்