அரசு வேலை வாங்கித்தருவதாக20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி
தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
விடுதி காப்பாளர்
தென்காசி மாவட்டம் சின்ன வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (வயது 37). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் பகுதியை சேர்ந்த அன்பு (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக அலெக்சாண்டர் கூறி உள்ளார். இதனால் அன்பு, தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரையும் அறிமுகம் செய்து உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11.28 லட்சத்தை அலெக்சாண்டர் வழங்கினர்.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
ஆனால் பணத்தை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும், அலெக்சாண்டர் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்பு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரூ.1.27 கோடி மோசடி
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக அலெக்சாண்டரை புதூரில் வைத்து மடக்கிப்பிடித்து நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அலெக்சாண்டர் இதுபோல் தூத்துக்குடி, நெல்லை, சென்னை ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1.27 கோடி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
பின்னர் போலீசார் அலெக்சாண்டரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----------