பூலாம்பாடி வழியாக பெரம்பலூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடக்கம்
பூலாம்பாடி வழியாக பெரம்பலூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி புதூரில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பூலாம்பாடி வழியாக பெரம்பலூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பெரம்பலூர் தாலுகா, சத்திரமனையில் இருந்து மங்கூனுக்கு நீட்டிக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவையையும், செட்டிகுளம் பகுதிக்கு கூடுதல் நடை அரசு டவுன் பஸ் சேவையையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூரில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பூலாம்பாடி புதூருக்கு சென்றடையும் அரசு டவுன் பஸ், மதியம் 1.35 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பூலாம்பாடி புதூரில் இருந்து பெரம்பலூருக்கு புறப்படும். இதேபோல் காலை 9.25 மணிக்கு மங்கூனில் இருந்து சத்திரமனைக்கும், மாலை 4.30 மணிக்கு சத்திரமனையில் இருந்து மங்கூனிற்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படும். காலை 7.50 மணிக்கு துறையூரில் இருந்து செட்டிகுளம் வழியாக பாடாலூருக்கும், மாலை 4.30 மணிக்கு பாடாலூரில் இருந்து செட்டிகுளம் வழியாக துறையூருக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படும். மேலும் செட்டிகுளத்தில் பஸ் நிறுத்தத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்ற வெல்கம் டூ நம் ஊர் சென்னை என்ற விழிப்புணர்வு குறும்பட காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதையும், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு தன் புகைப்படம் (செல்பி பாயிண்ட்) எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களுடன் பார்வையிட்டு, புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.