விஷ சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது - முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் விஷ சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update: 2024-06-29 06:27 GMT

கோப்புப்படம் 

சென்னை,

விஷ சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவை தேர்தலில் 40-க்கு 40 வெற்றி என்ற பெருமிதத்துடன் சட்டசபைக்கு வந்துள்ளோம். பொய் பிரசாரங்களை முறியடித்து செய்கூலி, சேதாரம் இல்லாத வெற்றியை மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வழங்கி உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். தி.மு.க. அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இதனை துணிச்சலுடன் சொல்கிறேன்.

மக்கள் மனதில் யார் உள்ளார்கள், மக்கள் யாரை புறக்கணித்தார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்தும். தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் விஷ சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது. விஷ சாராயம் மட்டுமில்லாமல், போதைப்பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தனை நடவடிக்கைகளை எடுத்த பிறகும் நடவடிக்கை இல்லை என கூறுவது பிரச்சினையை திசை திருப்பும் நாடகம். எதையோ மறைக்க அ.தி.மு.க. சிபிஐ விசாரணை கேட்கிறது. சாத்தான்குளம் சம்பவத்தை அ.தி.மு.க. அரசு மூடி மறைக்க முயன்றதால்தான், அப்போது சிபிஐ விசாரணை கோரினோம். ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான்; இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 8 செல்போன்கள் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு அழைப்புகளும் இருப்பதால் இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்