டாஸ்மாக் மதுபான பாட்டில்களை அரசே திரும்ப பெற வேண்டும்
டாஸ்மாக் மதுபான பாட்டில்களை அரசே திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுபாட்டில்கள்
தமிழகத்தில் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இருப்பினும் அதன்பயன்பாடு குறையவில்லை. இதனால் சாலைகள், குளம், குட்டைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இதேபோல் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை உடைத்து சாலைகள் மற்றும் விளைநிலங்களில் வீசி விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் ஆறு, குளம், குட்டைகளில் மதுபாட்டில்களை வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.
இதனால் சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் பாதங்களை உடைந்த கண்ணாடி பாட்டில் சிதறல்கள் பதம்பார்த்து விடுகின்றன. எனவே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை அரசே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடைகள் பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நவநாகாிகம் என்ற பெயரில் இளைஞர்கள் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் மது குடித்து வருகிறார்கள். மது போதை தலைக்கேறியதும் விவசாய விளை நிலங்கள் மற்றும் உலர் தானிய களங்களில் மதுபான பாட்டில்களை உடைத்து சென்று விடுகிறார்கள். சில சமயம் தானியங்களில் கண்ணாடி துகள்கள் கலந்து விடுகிறது. இதனால் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் மதுபாட்டில்களை உடைப்பதால் அந்த வழியாக செல்லும் மனிதர்கள் மட்டுமின்றி உணவு தேடி செல்லும் கால்நடைகளும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறுவது போல் இப்பகுதி விவசாயிகளது நலன் கருதி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.