நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள சேர்ந்தனூரை சேர்ந்தவர் வேலு மகன் ஏழுமலை (வயது 32). இவர் கடந்த 2010-ல் சேர்ந்தனூரில் இருந்து பள்ளித்தென்னலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வில்லியனூர் மேம்பாலத்தில் வரும்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுதொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு ஏழுமலையின் மனைவி தையல்நாயகி, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது பாதிக்கப்பட்ட ஏழுமலையின் குடும்பத்திற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்தை வழங்க வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதையடுத்து தையல்நாயகி சார்பில் வக்கீல் கருணாகரன், கோாட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 822-ஐ பாதிக்கப்பட்ட ஏழுமலை குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் ரூ.14 லட்சத்து 43 ஆயிரத்தை அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கியது. மீதமுள்ள தொகையை வழங்கவில்லை.. இதனால் மீதமுள்ள தொகையையும் அதற்கு வட்டியையும் சேர்த்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லையெனில் அரசு பஸ், ஜப்தி செய்யப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ் ஒன்றை கோர்ட்டு உத்தரவின்பேரில் வக்கீல் குமாஸ்தா காத்தவராயன், மனுதாரர் தையல்நாயகி ஆகியோர் முன்னிலையில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் பாக்யராஜ் ஜப்தி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்