பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.

Update: 2023-08-01 19:03 GMT

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளி அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடத்தை சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பூமதியும், 2-ம் இடத்தை பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி மகாலட்சுமியும், 3-ம் இடத்தை எளம்பலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கெவினும் பிடித்தனர். கல்லூரி அளவில் முதலிடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் எம்.ஏ. தமிழ் முதலாமாண்டு மாணவி காருண்யாவும், 2-ம் இடத்தை பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் எம்.எஸ்.சி. வேதியியல் 2-ம் ஆண்டு மாணவி கலையரசியும், 3-ம் இடத்தை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மின்னணு மற்று தகவல் தொடர்பு முதலாமாண்டு மாணவி ஹர்ணிஸ்ரீயும் பிடித்தனர்.

போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் சிறப்பாக பேசியதாக அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் ராகுலும், லெப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினியும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. மேலும் பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் தனியாக தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்