கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில்பெண் டாக்டர் மீது தாக்குதல்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரை தாக்கிய 3 பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தையை பார்க்க வந்த 3 பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி அன்னத்தாய். கா்ப்பிணியான இவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

நேற்று முன்தினம் இரவில், குழந்தையை பார்ப்பதற்காக 3 பெண்கள் வந்தனர். அவர்களை அங்கிருந்த காவலாளி, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதால் அனுமதிக்கவில்லை. இதனால் அவருடன், அந்த 3 பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் மீது தாக்குதல்

அந்த சமயத்தில் பணியில் இருந்த டாக்டர் சங்கீதா அங்கு வந்தார். அவர், பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டது. எனினும் குழந்தையை மட்டும் வெளியே எடுத்து வந்து காட்டுவதாக கூறினார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த 3 பெண்களும் திடீரென்று டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை வைத்து டாக்டர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திவிட்டு, அங்கு இருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக டாக்டர் சங்கீதா கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தாக்குதல் நடத்திய 3 பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பணிப்பாதுகாப்பு வழங்க கோரியும் டாக்டர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு மருத்துவ சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பணிக்கு திரும்பினார்கள். இந்த சம்பவத்தால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்