அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம்
வேப்பூர் அருகே அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
ராமநத்தம்,
சிதம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு நேற்று அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சை சேலம் மாவட்டம் மேட்டூர் கொட்டாம்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 52) என்பவர் ஓட்டினார். வேப்பூர் அருகே விளம்பாவூர் பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற வாகனத்தை வெங்கடாசலம் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே தலைவாசல் அருகே நாவக்குறிச்சியை சேர்ந்த பெருமாள் (38) என்பவர் ஓட்டி வந்த லாரி வந்தது.
இதில் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் லாரியும், பஸ்சும் பலத்த சேதமடைந்தன. மேலும் இந்த விபத்தில் திட்டக்குடி கொத்தட்டையை சேர்ந்த மணவாளன்(80), சேலம் மாவட்டம் வழப்பாடி விளாம்பட்டி மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் தர்ஷன்(7), ஏத்தாப்பூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்த வெள்ள கவுண்டர் மகன் ரமேஷ்(40) உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சையும், லாரியையும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.