பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்: தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு அளித்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக வந்த குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-12-01 17:28 GMT

பிரதமர் வருகை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மோடி தொடங்கி வைத்து பேசிவிட்டு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்தநிலையில் சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

குற்றச்சாட்டும், பதிலும்

அதில், பிரதமர் மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக வெடிகுண்டு சோதனைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பல உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பதில் அளித்தார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினரும் எந்த குறையையும் சொல்லவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

கவர்னர் கடிதம்

இந்த நிலையில் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கத்தை கேட்பதற்காக, தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவதற்காக அதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தமிழக பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.

மத்திய அரசிடமும் புகார்

இதுகுறித்து கேட்டபோது, இந்த பிரச்சினை பற்றி பேசி புகார் அளிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லி சென்று அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தமிழக பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.

மேலும், மத்திய அரசின் முகமை மூலம் இந்த பிரச்சினை பற்றி விரிவான விசாரணையை நடத்தும்படி அண்ணாமலை கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்