பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-10-18 16:46 GMT

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"அண்மையில் கர்நாடக எல்லையில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 14 உயிர்கள் பலியானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். அதன் அதிர்வலைகள் அடங்கும் முன்பு சிவகாசி அருகே உள்ள ரெங்கம்பாளையத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நெஞ்சை பிழியும் வேதனையாகும்.

இந்த விபத்தைத் தொடர்ந்து திருத்தங்கலில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிகளை இருப்பு வைக்கும் இடங்களையும், விற்பனை செய்யும் இடங்களையும் நேரில் பார்வையிட்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்யாத அதிகாரிகளின் அலட்சியம் தான் இதுபோன்ற விபத்துகளுக்கு முதன்மை காரணமாகும்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கியிருப்பது ஆறுதல் அளிக்கும் எனினும், விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்