கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகளுக்கான செலவீனங்களை அரசு ஏற்க வேண்டும்

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகளுக்கான செலவீனங்களை அரசு தரப்பில் செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-04-11 15:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு தற்போது 927 குடும்பங்களை சேர்ந்த 2,755 தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் தாசில்தார் அலுவலகம் வாயிலாக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசு உதவிப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி முகாமை பொறுத்தவரை அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் பழுது மற்றும் குடிதண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது. மின்பழுது என்றால் கூட மின்வாரிய ஊழியர்களை எதிர்பார்க்காமல் முகாமைச்சேர்ந்தவர்களே அதற்காக சம்பளத்திற்கு ஆட்களை நியமித்து சீரமைத்து கொள்கின்றனர். மேலும் மின் பழுதுகளை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் முறையாக வருவது இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

அதே போல குடிதண்ணீர் மோட்டார் பழுது, பைப் லைன் சீரமைப்பு என்றாலும் கூட வட்டார வளர்ச்சி அலுவலகத்தினர் அதற்கான பணிகளை செய்து தருவது இல்லை என்று கூறப்படுகிறது. அதற்காகவும் முகாம் தமிழர்களே செலவு செய்திட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், முகாமில் உள்ள அனைத்து குடும்பதாரரிடமும் முகாம் தமிழர்களே ஒவ்வொரு மாதமும் கட்டாய பணம் வசூல் செய்து மேற்கண்ட செலவுகளை ஈடுகட்டி வருகின்றனர். இவ்வாறு தங்களுக்கு கிடைத்து வரும் குறிப்பிட்ட அரசு உதவி பணத்தில் முகாமின் அடிப்படை வசதிகளுக்காக அவர்களே செலவு செய்து வருவது பலருக்கு சிரமமான விஷயமாக உள்ளது.

எனவே முகாமை பொறுத்தவரை அங்கு வசித்து வரும் தமிழர் குடும்பத்தினருக்கான அடிப்படை வசதி செலவீனங்களை அரசு துறை அதிகாரிகள் செய்து தர முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்