பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை

அண்ணா-பெரியாா் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-10-13 17:46 GMT

பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள மாவட்ட பாரத சாரணர் பயிற்சி மையத்தில் நடந்தது. நேற்று முன்தினம் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியும், நேற்று பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து போட்டிகளில் கலந்து கொண்டு அண்ணா, பெரியார் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் லெப்பைக்குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர் ஆதம்கனி முதல் இடத்தையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி பார்க்கவி 2-ம் இடத்தையும், லெப்பைக்குடிகாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பரிசு

போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் சிறப்பாக பேசியதாக பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி திருலெட்சுமியும், பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி பிரபாதேவியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல் பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி பார்க்கவி முதலிடத்தையும், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி கீர்த்தனா 2-ம் இடத்தையும், அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி ரிபானா பர்ஷின் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் சிறப்பாக பேசியதாக வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி கிருபாவும், கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி அஞ்சலியும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. இது தவிர பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் தனியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்