அரசு திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

அரசு திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருநங்கைகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-10-13 17:52 GMT

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி திருநங்கைகளிடையே பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் திருநங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும், அவர்களின் குறைகளை நலத்திட்டங்கள் மூலம் தீர்க்கவும், திருநங்கையர்களுக்கான நல வாரியத்தை அமைத்துள்ளார்கள். திருநங்கையர்களை பொருளாதார ரீதியாக மேம்பட பல்வேறு சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் திருநங்கைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களையெல்லாம் திருநங்கைகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறும், என்றார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்