வாய்க்காலில் கவிழ்ந்த அரசு பஸ்; 80 பேர் படுகாயம்

விருத்தாசலம் அருகே வாய்க்காலில் தலைக்குப்புற அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-23 21:46 GMT

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். பஸ்சை கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சாத்தியம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் (50) என்பவர் பணிபுரிந்தார்.

இந்த பஸ் காலை 8 மணிக்கு விருத்தாசலம் கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே மினிலாரி ஒன்று வந்தது. இதைபார்த்த டிரைவர், அதன் மீது மோதாமல் இருக்க பஸ்சை சாலையோரமாக இயக்கினார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோரத்தில் இருந்த ராஜா வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

மூச்சுத்திணறல்

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளில் பயணிகள் சிக்கியதோடு, ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் வாய்க்காலில் தண்ணீர் சென்றதால் சில பயணிகள் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரைந்து வந்து பஸ் கண்ணாடியை உடைத்து விபத்தில் சிக்கிய பஸ்சுக்குள் சென்று டிரைவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்டனர். விபத்தில் சிக்கியவர்களை இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மீட்பு பணியில் அமைச்சர்

அந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விபத்து சம்பவத்தை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்