ரூ.515 கோடியில் கோத்ரேஜ் நிறுவனத்தின் புதிய ஆலை: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடியில் கோத்ரேஜ் நிறுவனத்தின் புதிய ஆலையை நிறுவுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-08-10 20:44 GMT

சென்னை,

125 வருட பாரம்பரியம் கொண்ட கோத்ரேஜ் குழுமம் இந்தியாவில் 33 இடங்களில் உற்பத்தி நிறுவனங்களை அமைத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை அமைத்துள்ளது.

தற்போது அதே பகுதியில் ரூ.515 கோடி முதலீட்டில் 446 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சோப்புகள், முக அழகு கிரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் மற்றும் கொசு ஒழிப்பான் போன்றவற்றுக்கு அதிநவீன உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.

இந்த திட்டத்தில் 50 சதவீத அளவுக்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த புதிய ஆலையை நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசுக்கும், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரேஜ், மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சுதிர் சீதாபதி, தலைவர் (நிறுவனங்கள் விவகாரம்) ராக்கேஷ் ஸ்வாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்