புதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2023-04-21 18:47 GMT

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான் பண்டிகையாகும். இதையொட்டி முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் பிரியாணி சமைத்து சாப்பிடுவது உண்டு. மேலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும் ஓட்டல்களில் பிரியாணி விற்பனையும் களைகட்டும். இதனால் ஆட்டிறைச்சிகள் விற்பனை வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக காணப்படும்.

இதனால் இறைச்சி கடைகள் நடத்துபவர்கள், வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக கொள்முதல் செய்வது உண்டு. இதையொட்டி ஆட்டுச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டும். அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் ஆட்டுச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை சந்தையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனைக்காக அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தன. புதுக்கோட்டை மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டமான சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் ஆட்டிறைச்சி வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், ஆடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இதேபோல ஆடுகளை வளர்த்து விற்கும் தொழில் செய்பவர்களும் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். 2,200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் வெள்ளாடு, செம்மறி ஆடு வகைகள் விற்பனையானது. ஒரு ஆடு எடை அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையானதாக சந்தை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்