இயற்கை உரத்துக்காக வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள்

திருவாரூரில் வயல்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டு உள்ளன.

Update: 2023-03-03 18:45 GMT


திருவாரூரில் வயல்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டு உள்ளன.

ஆட்டுக்கிடை

மண் வளத்தை மேம்படுத்தவும், இயற்கை உரத்துக்காகவும் வயல்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து நடந்து வருகிறது.

பகல் முழுவதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு இரவில் வயலில் ஆட்டுக்கிடை போடுவார்கள். நெல், கரும்பு, வாழை, மற்றும் மானாவாரி கரிசல் நிலத்துக்கு ஆட்டுக்கிடை மிகவும் அவசியம். அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக வயலை சில நாட்கள் எந்த வேலையும் இன்றி அப்படிேய போட்டு வைத்திருப்பார்கள்.

இந்த நேரத்தில் வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்தால் வயலுக்கு இயற்கை உரம் கிடைக்கும்.

ஆடு மேய்ப்பவர்கள்

மேலும் அந்த நிலத்தின் மண் வளமும் மேம்படும். தை மாதத்தில் தொடங்கும் சம்பா அறுவடை பணிகள் பங்குனி வரை நடக்கும். திருவாரூர் மாவட்டத்தில் 95 சதவீதம் வயல்களில் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளன.

திருவாரூரில் மாங்குடி பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளை லாரிகளில் ஏற்றி வந்து வயல்களில் கிடை அமைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழுவினர் கிடை அமைக்க வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 1,000 ஆடுகள் வரை உள்ளன. மாடுகள் 50 முதல் 100 மாடுகள் வரை வைத்துள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகலில் ஆடுகளை மேய்க்கும் இவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வலை விரித்து அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகிறார்கள். இந்த ஆடுகள் இரவு பொழுதை அங்கேயே கழிக்கின்றன.

செம்மறி ஆடுகள்

இதுகுறித்து ஆடு உரிமையாளர்கள் கூறியதாவது:-

வயல்களில் செயற்கை மருந்துகள், உரங்கள் போட்டாலும் விவசாயிகள் இயற்கை உரத்துக்கு நம்புவது ஆடு, மாடு கிடைபோடுவதை தான். 100 குழிக்கு 1 கிடை அமைப்போம். ஒரு இரவுக்கு கிடை போட்டால் ரூ.500 வரை கொடுக்கின்றனர். கிடைபோடுவதற்கு செம்மறி ஆடுகளை தான் விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் 1 இரவு கிடை போட சொல்வார்கள். சிலர் 2 அல்லது 3 நாள் கிடை போட சொல்வார்கள். தற்போது தான் அறுவடை முடிந்துள்ளதால் குறைந்த அளவே ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக ஆடுகள் விரைவில் வந்துவிடும். இதன் பின்னர் கிடை போடுவதற்கு ஆடுகளுக்கு கிராக்கி ஏற்படும். இவ்வாறு அவா்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்