கடையநல்லூரில் ஆடுகள் விற்பனை மும்முரம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூரில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
கடையநல்லூர்:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், எட்டயபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த சந்தையில் கடந்த சில நாட்களாக ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகள் தரத்திற்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ளதால் ஆடுகள் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.