விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கான கோலப்போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-27 20:12 GMT

விழுப்புரம், 

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்டமும் வாழ்ந்து காட்டுவோம் திட்டமும் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களிடையே கோலப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து பல்வேறு சுயஉதவிகுழுவினர் கலந்துகொண்டு ஒலிம்பியாட் போட்டி தொடர்பான கோலங்களை பல்வேறு வண்ணங்களில் வரைந்தனர். இதில் சிறந்த முறையில் கோலங்கள் வரைந்த 3 குழுக்களுக்கு அவர்களை பாராட்டும் விதமாக மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி பரிசு வழங்கினார்.

பரிசு

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து கலந்துகொண்ட சுயஉதவி குழுக்களுக்கு முதல் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 3-ம் பரிசாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் அனைத்து உதவி திட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ், போட்டியாளர்களை ஒருங்கிணைத்து போட்டிகளை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்