மோடி ஆன்மிக பயணத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

பிரதமரின் தமிழக ஆன்மிக பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியை கண்டிக்கிறேன் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Update: 2024-05-30 08:34 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக ஆன்மிக பயணம் வரவேற்கத்தக்கது. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரசார முடிவுக்கு பிறகு பிரதமர் இந்தியாவிலே ஆன்மிக இடங்களுக்கு சென்றதையும், தியானம் செய்ததையும் அனைவரும் நன்கு அறிவோம். அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் தியானம் செய்வது என்பது அவரது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டு.

இதற்கும் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்குப்பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக தொடர்ந்து பிரதமர் மீது அவதூறு கூறவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி இதனை குறை கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

தேர்தல் காலத்திலே தலைவர்கள் வெளிநாடுகளுக்கு போகலாம், குளிர் பிரதேசங்களுக்கு போகலாம், சுற்றுலா செல்லலாம். ஆனால் பிரதமர் ஆன்மிக உணர்வோடு புனித இடத்திலே தமிழகத்தில் தியானம் செய்வதை குற்றம்சாட்ட நினைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. இது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியின் குறுகிய பார்வைக்கு எடுத்துக்காட்டு. எனவே பிரதமரின் தமிழக ஆன்மிக பயணத்தை வரவேற்று, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்