நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் - டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்த உதயநிதி
சேலம் மாநாட்டை மிகச் சிறப்பான வெற்றி மாநாடாக மாற்றி காண்பித்த அனைவருக்கும் நன்றி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., எழுதிய 'உரிமைக்குரல்', 'பாதை மாறா பயணம் (பாகம்-3), 'தி மேன்- மெசெஜ் (ஆங்கிலம்), 'மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ்'(ஆங்கிலம்) ஆகிய 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், 'இந்து' என்.ராம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதனையடுத்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சேலம் மாநாட்டை மிகச் சிறப்பான வெற்றி மாநாடாக மாற்றி காண்பித்த உங்கள் அனைவருக்கும், இளைஞர் அணி தம்பிமார்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேலத்தில் பல லட்சம் இளைஞர்கள் கூடிய மாநாட்டிற்கு பிறகு தற்போது நடக்கும் முதல் நிகழ்ச்சி. மேலும் இந்த அரங்கும் புதுப்பித்த பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சி பொருளாளர் அவர்களுக்கு அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இளைஞர் அணி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தி காண்பித்து இருக்கிறோம். கலைஞரோடு கலந்த கலவையாக பாலு இருக்கிறார். கலைஞர் மீது பற்று கொண்டவர் டி.ஆர். பாலு. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் பாலு மாமா பாதை மாறா பயணம் என்று புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். கலைஞர் அவர்கள் வழியை மட்டுமல்ல முதல்-அமைச்சர் அவர்களின் வழியையும் பின்பற்றி புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
டி.ஆர்.பாலு மாமாவை பிறந்த குழந்தையிலிருந்து எனக்குத் தெரியும். என்னை தூக்கி வளர்த்ததில் அவரும் மிக மிக முக்கியமானவர். முதல்-அமைச்சரை எல்லோரும் தளபதி என்று அழைப்பார்கள், அதற்கு முன்பாகவே இளம் தென்றல் என்று அழைத்தவர் டி.ஆர்.பாலு. இளைஞர் அணி மாநாட்டுக்குத்தான் போதிய நிதி கொடுக்க வில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள், அனுபவம் முக்கியம் தான் இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், முதல்-அமைச்சர் யோசித்தாலும் நீங்கள் தலைவரிடம் அதை சொல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.