குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் - அமைச்சர் தாமோ. அன்பரசன்
மாமியார், கணவர், ஜோதிடரிடம் கேட்டு கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தாமோ. அன்பரசன் பேசினார்.
சமுதாய வளைகாப்பு விழா
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் செவிலிமேட்டில் நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,900 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற உள்ளது. கர்ப்பிணிகளுக்கு உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் வலிமை அளிக்க கூடிய மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.
தற்போது 300 கர்ப்பிணி்களுக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. பெண்கள் தான் கருவுற்று இருப்பது அறிந்தவுடன் அருகில் உள்ள சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கு வழங்கப்படும் இணை உணவு ஊட்டச்சத்து உணவை பெற்று கொள்ள வேண்டும்.
தமிழ் பெயரை சூட்டுங்கள்
நமது மாவட்டத்தில் மட்டும் 940 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. கருவுற்ற பெண்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும், முன்பு எல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரில் பெயர் சூட்டி உள்ளனர். அந்த பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்து உள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரையோ அல்லது புரியாத பெயரையோ வைக்கின்றனர். பெயர் வைக்கும்போது மாமியார், கணவர், ஜோதிடரிடம் கேட்டு கொண்டிருக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், க.சுந்தர், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், ஒன்றிய குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், எஸ்.டி. கருணாநிதி, சரஸ்வதி மனோகரன், ஹேமலதா ஞானசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம்) கிருஷ்ணவேணி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜாத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.