சிறுமி திருமணம்: வாலிபர் உள்பட 4 பேர் கைது

கோவையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-10 20:30 GMT


கோவையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுமிக்கு திருமணம்

கோவை பீளமேடு வி.கே.ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் விளாங்குறிச்சி ரோடு கருப்பண்ண கவுண்டர் லே அவுட்டில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநல அதிகாரி திலகவதி அங்குசென்று விசாரணை நடத்தினார். இதில் திருமண வயதை எட்டாத நிலையில் சிறுமிக்கு இரு தரப்பு பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த குழந்தை திருமணம் குறித்து சமூக நல அலுவலர் திலகவதி கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து குழந்தை திருமண தடை சட்டத்தில் புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் மற்றும் அவரது தந்தை குருநாதன், சிறுமியின் தந்தை சுரேஷ், தாய் சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரு குடும்பத்தினருக்கும் நோட்டீசும் வழங்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்பவர்கள் மீது குழந்தை திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க கூடும். எனவே குழந்தை திருமணங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்