சதுரங்கப்பட்டினத்தில் கடற்கரையில் சுற்றி திரியும் ராட்சத திமிங்கலங்கள்

சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் ராட்சத திமிங்கலங்கள் சுற்றி திரிகின்றன. அவை படகுகளை கவிழ்த்து விடுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.

Update: 2023-07-23 08:42 GMT

ராட்சத திமிங்கலங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதி மீனவர்கள் தினமும் 40 படகில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் சில தினங்களாக கரைப்பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் ராட்சத திமிங்கலங்கள் ஆழ்கடல் பகுதியில் உணவுக்காக சிறிய வகை மீன்கள் கிடைக்காததால் இங்கு வந்து சிறிய மீன்களை பிடித்து தின்று பசியாறுகின்றன. இந்த திமிங்கலங்கள் கட்டுமரம் மற்றும் பைபர் படகை கவிழ்க்கும் ஆற்றல் கொண்டவை ஆகும். அதேபோல் அவற்றிடம் மனிதர்கள் சிக்கினால் கடித்து காயப்படுத்தி, கொமோடா டிராகன், முதலை, மலைப்பாம்பு போல் விழுங்கி விடும்.

மீனவர்கள் அச்சம்

சில நாட்களாக சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது 10 அடி முதல் 20 அடி நீளமுள்ள திமிங்கலங்கள் கரைப்பகுதியில் படகுகளின் அருகில் வந்து உரசிவிட்டு செல்வதால் எங்கு படகுகளை கவிழ்த்து, தங்களை கடித்து காயப்படுத்தி விழுங்கி விடுமோ என்ற உயிர் பயத்தில் தினம், தினம் ஒரு வித பயத்துடனேயே கடலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் மீன்பிடி வலைகளையும் வாயில் கடித்து திமிங்கலங்கள் சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் கடலில் ஏற்பட்டுள்ள தட்பவெப்ப சீதோஷ்ன நிலை காரணமாக ஆழ்கடலில் உள்ள திமிங்கலங்கள் இரை தேடி கரைப்பகுதியை நோக்கி வருவதாகவும் சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் கரைப்பகுதியில் திமிங்கலங்கள் உலாவுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே ராட்சத சுறாக்கள் கடற்கரையில் உலா வந்த நிலையில் தற்போது ராட்சத திமிங்கலங்களும் வருகை தந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்