மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது -ராமதாஸ் வலியுறுத்தல்
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்திருக்கிறது. இது ஆபத்தானது.
இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள டி.எம்.எச்-11 வகை கடுகை டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மரபணுவியல் வல்லுனருமான தீபக் பெந்தல் தலைமையிலான குழு தான் உருவாக்கி உள்ளது. ஆனால், இதுகுறித்த ஆய்வின் அடிப்படையையே ஆராய்ச்சிக் குழுவினர் மாற்றிவிட்டனர். விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்ட ஆய்வுக்குழுவினர் அளித்த தகவல்களை நம்பி மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்திருப்பது ஆபத்தானது, அது சீரழிவை ஏற்படுத்தி விடும்.
எனவே, இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.