கொள்ளிடம் ஆற்றில் தேவைப்படும் இடங்களில் கதவணை கட்டப்படும்

கொள்ளிடம் ஆற்றில் தேவைப்படும் இடங்களில் கதவணை கட்டப்படும்

Update: 2022-08-05 18:12 GMT

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் தேவைப்படும் இடங்களில் கதவணை கட்டப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளதால் அளக்குடி கிராமத்தில் ஆற்றின் கரை பகுதியை முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

கதவணை கட்டப்படும்

எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் வகையில் உரிய இடங்களில் ஆய்வு செய்து கதவணை கட்டப்படும். இதன் மூலம் நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் லலிதா, டி.ஆர்.ஓ. முருகதாஸ், தாசில்தார் செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமிபாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்