பொது இடங்களில் குப்பை; ரூ.8½ லட்சம் அபராதம்: பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களில் குப்பைகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.8½ லட்சம் அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-15 06:49 GMT

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் இந்த மாதம் 10-ந் தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கும் ரூ.8 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 184 புகார்கள் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் சென்னை கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகளில் வேம்புலி அம்மன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, ரங்கையா சாலைக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பிட்ட காலத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியிணை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்