சிவகாசி யூனியன் பகுதியில் நீர் நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படும் நிலை
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட நீர்நிலைகளில் கடந்த சில வாரங்களாக குப்பை கழிவுகளை லாரி, லாரியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
சிவகாசி
திருத்தங்கல் நகராட்சி
சிவகாசி மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள திருத்தங்கல் பகுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சியாக இருந்தது. அப்போது அந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் நகரின் வெளியே விருதுநகர் ரோட்டில் ஒரு இடத்தில் கொட்டப்பட்டன. 2 வருடங்களில் அந்த பகுதி குப்பை மலை போல் காட்சி அளித்தது. இதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் அப்போதைய திருத்தங்கல் நகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு திருத்தங்கல் நகராட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் அந்த குப்பை குவியலை 1 வருடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அகற்றி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கென ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 1 வருடம் 10 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் அந்த குப்பை மலை முழுவதுமாக அகற்றப்படவில்லை.
நீர்நிலைகள்
இந்தநிலையில் சுமார் 30 சதவீத குப்பைகள் உள்ள நிலையில் இதனை உடனே அகற்ற முடிவு செய்த அந்த தனியார் நிறுவனம் குப்பைகளை தரம் பிரித்து அறைத்து அகற்றாமல் இரவு நேரங்களில் லாரிகளில் குப்பை கழிவுகளை அள்ளி சென்று கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் கொட்டி வருவதாக கூறப்பட்டது. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற் றம் வீசி வருகிறது.
அனுப்பன்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை கொட்டி விட்டு லாரிகள் திரும்பி வந்து கொண்டிருந்த போது நாரணாபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அந்த லாரிகளை பிடித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். விதிகளை மீறி குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டி வரும் தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுப்பன்குளம், நாராணாபுரம் பஞ்சாயத்து மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.