கஞ்சா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்

கஞ்சா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.

Update: 2023-07-12 19:37 GMT

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் காட்பாடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள விவரங்களை கேட்டறிந்தார்.

காட்பாடி போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியபெற்ற குற்ற வழக்குகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. செயின் பறிப்பு சம்பவங்கள், கொலை வழக்குகள், அவற்றில் தீர்வு கண்டறியப்பட்டவை எத்தனை என ஒவ்வொன்றையும் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், பழனி, லெனின் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஆய்வுக்குபின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர், காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. நெரிசல் மிகுந்த இடங்கள் கண்டறியப்பட்டு அதற்கு தீர்வு காணப்படும்.

கஞ்சா கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (நேற்று) கூட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி வருபவர்களின் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். போலி நிருபர்கள் என கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்