குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
லாலாபேட்டை பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 பேர் கைது
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பொய்கைப்புத்தூர் வடக்கு பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப்படுகை தைலமரக்காட்டுக்குள் சாராயம் தயாரிப்பதற்காக ஊறல் போடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஊறல் போட்டிருந்ததாக வளையார்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் (வயது 56), சித்தலவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாந்தோணி (48) ஆகியோரை கரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கடந்த 14-ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இவர்கள் 2 பேரும் தொடர்ந்து லாலாபேட்டை பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் ஞானசேகர், தாந்தோணி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஏற்கனவே குளித்தலை சிறையில் உள்ள ஞானசேகர், தாந்தோணி ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.