பல்வேறு வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
களக்காடு அருகே கீழகாடுவெட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் இசக்கி மகன் பலவேசம் (வயது 36). இவரை அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் களக்காடு போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோன்று சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் என்ற பண்ணை அய்யப்பனை (23) அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சேரன்மாதேவி போலீசார் கைது செய்தனர். முக்கூடல் கீழபெரிய வீதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சிவகணேஷை (21) அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் முக்கூடல் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, பலவேசம் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் இந்த உத்தரவு நகல்களை களக்காடு, சேரன்மாதேவி, முக்கூடல் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.