வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை காரில் கடத்திய 6 பேர் கும்பல்: உறவினர்கள் சாலை மறியல்

கரூர் அருகே வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. இதையடுத்து அந்த பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-04 19:01 GMT

வேலைக்கு சென்ற பெண்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் நூற்பாலைக்கு சொந்தமான வாகனத்தில் வேலைக்கு செல்லும் இவர் பின்னர் அதே வாகனத்தில் வீடு திரும்புவார். இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த பெண் நூற்பாலைக்கு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு அந்த பெண் வேலை முடிந்து நூற்பாலைக்கு சொந்தமான வாகனத்தில் ஆர்.புதுப்பட்டிக்கு வந்து இறங்கி உள்ளார்.

காரில் கடத்தல்

அப்போது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து அந்த பெண்ணை கடத்தி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனது மகளை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றதாகவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரியும் அவர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மறியல்

இந்தநிலையில் உடனடியாக புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து, தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று இரவு அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு உள்ள அரவக்குறிச்சி-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்